கொரோனா தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே மாரடைப்பு வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா சமயத்தில் அதிகளவு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தியதால் பலருக்கு கரும்புஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொரோனா தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதிகளவு மாரடைப்பு வந்துள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிகளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்டனர். இதனால் உடலில் மருந்தின் வீரியம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் 20 லட்சம் பேர் இறந்து போகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு ஆண்டிபயாட்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் இஞ்சி, மிளகு, துளசி போன்றவற்றை எடுத்துக் கொண்டாலே காய்ச்சல், சளி குறைந்து விடும். பாக்டீரியா தொற்று என உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி, ஆன்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது.
எந்த நோயாளிக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்ய வேண்டும். அவசியமின்றி ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தக்கூடாது. ஆன்டிபயாட்டிக் தரவுகளை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான், விழிப்புணர்வு ஏற்படும். கொரோனோவுக்கு போடப்பட்ட தடுப்பூசியில் 100% பக்கவிளைவுகள் இல்லை எனக் கூற முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
Read More : பெண்களே..!! வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ரூ.35 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..!! முதலீடும் கம்மிதான்..!!