சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள சிந்த்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (35). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. பல மருத்துவ முயற்சிகள் செய்த போதிலும், அது பலன் கொடுக்கவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று குளித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்த் யாதவ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்த குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, இறந்த ஆனந்த் யாதவின் தொண்டையில் உயிருடன் கோழி இருந்தது தெரியவந்தது. மேலும், அவரது உயிரிழப்புக்கு கோழிதான் காரணம் என்பதும் தெரிந்தது.
அதாவது, ஆனந்த் யாதவின் தொண்டையில் உள்ள சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாயை கோழி அடைத்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆனந்த் யாதவ் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர் சாந்து பாக் கூறுகையில், “இதுவரை 15,000 பிரேதப் பரிசோதனைகள் செய்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு விசித்திரமான சம்பவத்தை நான் பார்ப்பது இதுவே முதல் முறை” என்றார்.
ஆன்ந்த் யாதவ் மரணம் தொடர்பான அசாதாரண சூழ்நிலைகள் அமானுஷ்ய நடைமுறைகளுடன் தொடர்புடையது என்று கிராமவாசிகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையாக வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியின் சடங்கின் ஒரு பகுதியாக அவர் உயிருள்ள கோழியை விழுங்கியிருக்கலாம் என்று கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
Read More : விரட்டி விரட்டி கொட்டிய மலை தேனீக்கள்..!! பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி..!! 4 பேர் படுகாயம்..!!