Gold mine: தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த சோக சம்பவத்தில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில், எந்த அனுமதியும் இல்லாமல், பணியாளர்கள் யாருக்கும் தெரியாமல் அங்கு பணி செய்து வந்தனர். இது அறிந்த போலீஸார் கடந்த ஆண்டு இறுதியில், அனைவரும் உடனே வெளியே வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் பணிகளைத் தொடர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இதனால், போலீஸார் உள்ளே இருந்த பணியாளர்களுக்கு உணவு தண்ணீர் போன்றவற்றை வழங்குவதை நிறுத்தினர். இதனால் கண்டிப்பாக அவர்கள் வெளியே வந்தாக வேண்டும் என்று போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், உள்ளே இருந்தவர்கள் வெளியே வராமல் இருந்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் உள்ளேயே சிக்கி இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால், உள்ளே இருந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து அவர்களை வெளியே அழைத்து வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியிலும், உயிரோடு இருப்பவர்களை வெளியே கொண்டு வரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் சுமார் 70க்கும் மேற்பட்டோரின் உடலை போலீஸார் மீட்டுள்ளனர். மீதமுள்ள உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தொடரும் நிலையில், இன்னும் பல சடலங்கள் மீட்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.