Rajouri: ரஜோரியில் 17 பேரின் மரணத்தின் பின்னணியில் எந்தவிதமான தொற்றும் இல்லை என்றும் அவர்கள் நச்சுப் பொருட்களால் இறந்துள்ளனர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கமளித்துள்ளார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் பாதல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிராமத்தில் வசித்து வந்த முகமது அஸ்லாமின் குடும்பத்தினருக்கு காய்ச்சல், வலி, வாந்தி, கடுமையான வியர்வை மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் இருந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்று வந்த சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி, முகமது அஸ்லாம் மற்றும் அவரது 6 குழந்தைகள் உள்பட 8 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் வசித்து வந்த மற்ற இரண்டு குடும்பங்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தில், 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவினர், அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மர்ம மரண விவகாரம் குறித்தும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று விளக்கமளித்துள்ளார். 17 பேரின் மரணத்தின் பின்னணியில் எந்தவிதமான தொற்றும் இல்லை, ஆனால் அவர்கள் நச்சுப் பொருட்களால் இறந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏஎன்ஐ செய்தியின்படி, இந்த விஷப் பொருளை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதன் பின்னணியில் சதி இருப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்படி, இந்த தொற்று வைரஸ் அல்லது பாக்டீரியா இயல்புடையது அல்ல. அதில் விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அது என்ன வகையான விஷம் என்பதை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மூத்த தொற்றுநோய் விஞ்ஞானி மற்றும் GMC ரஜோரியின் சமூக மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ஷுஜா காத்ரி கூறினார்.
Readmore: ஞானசேகரனுக்கு 6 போலீஸாருடன் தொடர்பு… விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!