தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்தைகளை அபகரிக்கும் சூழ்ச்சி” என சென்னையில் நடந்த கே. நடராசன் படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசுகையில், “வலதுசாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழித்தொழிக்க நினைக்கிறது. தேர்தல் நடைமுறை தான் பாஜக வளர காரணமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் அரசியல் கோட்பாட்டோடு வலிமையோடு உள்ளன. வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமையோடு உள்ளன. தேர்தல் களத்தில் தலித்களை எவ்வாறு கைப்பற்றுவது என்று வலதுசாரி கைதேர்ந்து உள்ளனர். இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் விசிக இடதுசாரிகளோடு பேணி பாதுகாத்து உள்ளோம்.
ஆளுநர் ஆர்.என் ரவி மீண்டும் மீண்டும் தன்னை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழகத்தில் தலித்துகள் முதல்வராக வேண்டும் என்பது அப்பாவி தலித்துகளை வளைத்து போடும் ஒரு சூழ்ச்சி. ஆனால் தமிழ்நாட்டின் தலித்துகள் ஆளுநரின் சூழ்ச்சிக்கு ஏமாற மாட்டார்கள் என்பதை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். திடீரென்று சுவாமி சகஜானந்தர் விழாவில் பங்கேற்பதும், தலித்துகளை பற்றி பேசுவதும், தலித்துகள் முதல்வராக வேண்டும் என்று கூறுவதும் ஒரு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
சீமான் பொருத்தம் இல்லாத அரசியலை தற்போது பேசிக் கொண்டிருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகளை பெற இந்த உத்தியை பின்பற்றுகிறாரா என எண்ணத் தோன்றுகிறது. சீமான், பாசிச அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா என கேள்வி எழுகிறது” என்று தெரிவித்தார்.
Read more : அடேங்கப்பா..!! பாஜகவின் வங்கிக் கணக்கில் ரூ.7,113 கோடி..!! தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல்..!!