தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் அமல்படுத்துவதை ஏற்றுக் கொள்கிறோம்.
மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். அதேபோல், பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Read More : SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? ஏடிஎம் கார்டு இல்லாமல் செல்போன் மூலம் எப்படி பணம் எடுப்பது தெரியுமா..?