அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் சில அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அவர்களில் பலர், முகவர்களுக்கு பணம் செலுத்த தங்கள் நிலத்தையும், மற்ற சொத்துக்களையும் விற்றுள்ளனர். தற்போது வெறும் கையுடன் பரிதாப நிலையில் சொந்த நாட்டுக்கே திரும்பியுள்ளனர். பலர் தங்கள் பயண முகவர்களால் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், பனாமாவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இந்தியர்கள் முகாமிட்டுள்ளனர்.
அங்கிருந்து அவர்கள் மெக்சிகோவுக்கும், இறுதியாக அமெரிக்க எல்லைக்கும் செல்வதற்காக அந்த பனாமா காட்டுப் பகுதியில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். ஆண்கள் ரப்பர் பூட்ஸ் அணிந்துக் கொண்டு சேற்றில் அமர்ந்திருப்பதையும், பெண்கள் தங்களின் மடியில் குழந்தைகளுடன் இருப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
பனாமாவில் இருந்து வடக்கு நோக்கி கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் குவாத்தமாலாவுக்குச் சென்று மெக்சிகோ எல்லையில் இருந்து பின்னர், அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றே கூறப்படுகிறது. இதுவரை 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஹர்தோர்வால் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர், அமெரிக்க எல்லை ரோந்துப் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஒரு முகவரிடம் ரூ.30 லட்சம் கொடுத்து, அமெரிக்கா முறையாக செல்ல முயன்றதாகவும், ஆனால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாக கூறும் ஹர்விந்தர் சிங், கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, நிகரகுவா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு முகவர்களால் தாம் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார்.
இதற்காக தான், ரூ.42 லட்சம் செலவு செய்ததாக ஹர்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி வாஷிங்டன் செல்லவுள்ள நிலையில், இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : பொதுத்தேர்வு… இரவு நேரத்திலும் தடையில்லா மின்சாரம்…! மின்வாரியம் அதிரடி உத்தரவு