“பயிர் கடனை தள்ளுபடி செய்தோம் என்று கொஞ்சம் கூட கூசாமல் அமைச்சர் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பயிர் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்துள்ளார் அமைச்சர் பெரியகருப்பன்.
2021இல் திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்தோம் என்று பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான். தமிழ்நாடு அரசின் கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 – 2022 முதல் 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டி ரூ.1,430.27 கோடி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் பெரியகருப்பன் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா..? 4 ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. நகைக் கடன், கல்விக் கடன், பயிர் கடனை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து, மக்களை கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறியளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா..? என்று அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.