அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் நேதாஜி ரோட்டில் அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்நிலையில், மதுரை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை மாவட்டம் நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையை கோயில் உண்டியலில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் போடப்படும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கண்காணிக்க வேண்டும். தட்டில் உள்ள காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒருசிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தட்டில் விழும் காணிக்கையை காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை வாபஸ் பெற்றுள்ளது. தட்டுக்காணிக்கையை உண்டியலில் செலுத்தும் அறிவிப்பு செயல் அலுவலரின் தன்னிச்சையான முடிவு என்றும் தட்டுக்காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு தொடர்பாக செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.