சென்னை கொரட்டூரை அடுத்த செந்தில் நகரை சேர்ந்தவர் 75 வயது முதியவர் பாலசுந்தரம். இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். பாலசுந்தரம் கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பர்தா அணிந்து வந்த பெண், பாலசுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து பாலசுந்தரம் போலீசில் புகாரளித்த நிலையில், கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிசிடிவி காட்சியில், பர்தா அணிந்து வந்த பெண், செயினை பறித்துச் சென்றதும் சிறிது தூரம் சென்று ஒரு ஆட்டோ பிடித்து 2 தெரு தள்ளி இறங்கியுள்ளார். ஆனால், ஆட்டோவில் இருந்து கீழே இறங்கும் போது, அவர் பர்தா அணியவில்லை. இதில், அவரது முகம் சிசிடிவியில் பதிவான நிலையில், அதை காண்பித்து முதியவர் பாலசுந்தரத்திடம் போலீசார் கேட்டனர். அப்போது தான் அந்த பெண் குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியானது.
பர்தா அணிந்திருந்த பெண் பெயர் சுகன்யா (வயது 22). இவர், முதியவர் பாலசுந்தரத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர். பி.பி.ஏ பட்டப்படிப்பு முடித்த சுகன்யா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு, சூதாட்டத்தில் ஆர்வம் இருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அப்போது தான், தனக்கு நன்கு தெரிந்த முதியவரான பாலசுந்தரம் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து கடனை அடைக்க முடிவு செய்து, இந்த சம்பவத்தில் இறங்கியுள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.