மும்மொழி கொள்கை குறித்த மத்திய அமைச்சரின் பேச்சுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என பேசியிருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, 23-01-1968 அன்று மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இந்தி முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி அகற்றப்பட்டது. அண்ணாவின் கொள்கையை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் கடைபிடித்தார்கள். இருமொழிக் கொள்கை என்பது தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம் ஆகும்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Read More : ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விருப்பமா..? 979 காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!