பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவர் அனோக் மிட்டல் (வயது 35). இவரது மனைவி லிப்சி மிட்டல். இவர், மிகப்பெரிய தொழிலதிபர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, தேலோ நகருக்கு தனது மனைவியை அனோக் மிட்டல் டின்னருக்கு அழைத்துச் சென்றுவிட்டு, இருவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி காரை சாலையோரத்தில் நிறுத்தினார் அனோக். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் அனோக்கை தாக்கியது. மேலும், காருக்குள் இருந்த அவரது மனைவி கொல்லப்பட்டார். இதற்கிடையே, மயக்க நிலையில் கிடந்த அனோக், மீண்டும் எழுந்து பார்த்தபோது, தனது மனைவி சடலமாக கிடப்பதையும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அத்துடன் இவர்கள் வந்த காரும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ”அனோக் மிட்டலுக்கு 24 வயது இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், தன்னுடைய கணவரின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டுபிடித்த மனைவி, தொடர்ந்து அவரை கணித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, கள்ளக்காதல் விவகாரம் தனது மனைவிக்கு தெரிந்துவிட்டதால், அவரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்துள்ளார். கூலிப்படையினருக்கு ரூ.2.5 லட்சம் பேரம் பேசப்பட்டு, முன்பணமாக ரூ.50,000 கொடுத்திருக்கிறார் அனோக். தற்போது இந்த வழக்கில் அனோக்கின் காதலி, கூலிப்படையை சேர்ந்த அம்ரித்பால் சிங் (வயது 26), குர்தீப் சிங் என்ற மன்னி (வயது 25), சோனு சிங் (வயது 24) மற்றும் சாகர்தீப் சிங் (வயது 30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், கூலிப்படையின் முக்கிய தலைவனான குர்பிரீத் சிங் என்ற கோபி தலைமறைவாகி உள்ளார். இதனால், அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது ஆம் ஆத்மி எம்எல்ஏவான அனோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.