அப்பா என்றால் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்.. குடிக்க வைக்கக் கூடாது என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது, ’அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி உள்ளாரே?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”அப்பா என்றால், இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லியிருப்பார்கள். அவரது கட்சிக்காரர்களை தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். குடிக்க வைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றினால் தான், நிதி ஒதுக்குவோம் என்று கூறுவது எப்படி ஜனநாயகம் ஆகும்..? உங்கள் காசை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. மாநிலங்களின் நிதி வருவாயின் பெருக்கம்தான் ஒன்றிய அரசின் நிதி. ஒன்றிய அரசுக்கென்று வருவாய் பெருக்கத்திற்கு ஏதாவது வழி உள்ளதா..? இதை செய்தால்தான் நிதி தருவோம் என்று சொல்வது கொடுங்கோன்மை.
இந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்கிற அவசியம் ஏன்..? நாட்டில் உள்ள ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை என அனைத்திற்கும் ஒரே மருந்து இந்தி கற்பதுதானா? இந்தியை ஏன் திணிக்கிறீர்கள். கல்வியை பொதுப்பட்டியலுக்கு சென்றதால்தான் இந்த பிரச்சனை. மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.