ரேகா குப்தா டெல்லியின் அடுத்த முதல்வராகவும், பர்வேஷ் வர்மா துணை முதல்வராக பாஜக மேலிடம் தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்து வந்த இந்தியாவின் தலைநகரான டெல்லியில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்துமுடிந்தது. 70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட டெல்லியில் 36 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும்.
பெரும் எதிர்பார்ப்புக்கு நடந்து முடிந்த இந்த தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், எதிர்க்கட்சியாக அமரவுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக.
இந்நிலையில் டெல்லியின் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று பாஜகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. நாளை(பிப்ரவரி 20ஆம் தேதி) டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் பிரமாண்டமான பதவியேற்பு விழாவை நடத்துவதாக பாஜக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்றைய கூட்டம் முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா டெல்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை, பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது டெல்லியின் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது பாஜக மேலிடம். மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரே பெண் முதல்வர் ரேகா குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான தலைவர்களை முன்னிலைப்படுத்துவதற்கு பதிலாக, பொதுமக்களில் மிகுந்த வரவேற்பு இல்லாத ஒருவரை தேர்வு செய்து முதலமைச்சர் பதவி வழங்கும் பாஜகவின் பாரம்பரியமான நடைமுறையை, இம்முறையும் பாஜக தொடர்ந்து செயல்படுத்தியுள்ளது.
யார் இந்த ரேகா குப்தா:
ஹரியானாவின் ஜூலானாவில் பிறந்த ரேகா குப்தா, டெல்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் படித்தார். அவர் 2022 ஆம் ஆண்டு மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார். 50 வயதான ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தல்கள் மூலம் அரசியலில் கால் பதித்தார்.1996-97 வரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றினார்.
ரேகா குப்தா மூன்று முறை கவுன்சிலராகவும், தெற்கு டெல்லி மாநகராட்சியின் (SDMC) முன்னாள் மேயராகவும் இருந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு உத்தரி பிதம்புராவில் இருந்தும், 2012 ஆம் ஆண்டு வடக்கு பிதம்புராவில் இருந்தும் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரேகா குப்தா பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். அவர் முன்பு டெல்லி பாஜகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய்க்கு எதிராக எம்சிடி மேயர் வேட்பாளராக பாஜகவால் அவர் நிறுத்தப்பட்டார். 2025ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எம்எல்ஏ-வான ரேகா குப்தா டெல்லியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.