fbpx

இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள்..!! சினிமா டூ அரசியல் வாழ்க்கை ஒரு பார்வை..

ஆண்டுகள் போயினும், ஆட்சிகள் மாறினும் காட்சிகளும் கொள்கைகளும் மாறினும், “ஜெயலலிதா மட்டும் இப்போது இருந்திருந்தால்?” என்ற வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

தனது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது என்ற பேச்சினை உருவாக்கியவர் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தனது தொண்டர்களைக் கடந்து பொதுமக்களாலும் அம்மா என அழைக்கப்பட்ட ஜெயலலிதா தான். அதிமுக என்ற கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளாராக அரசியல் பயணத்தினை தொடங்கிய ஜெ தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தமிழ்நாடு மக்களுக்காக அர்ப்பணித்தார்.

அம்மா என்றும் , புரட்சித் தலைவி என்றும் அதிமுகவினராலும் தமிழக மக்களாலும் அழைக்கப்பட்ட தமிழக முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77 வது பிறந்தா நாள் தினம் இன்று. திரை வாழ்க்கையில் அறிமுகமான ஜெ-யின் வாழ்க்கை தமிழக முதலமைச்சராக முடிந்தது. அவரின் அரசியல் பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

திரை வாழ்க்கை : 1948 பிப்ரவரி 24-ல் ஜெயராம் – வேதவல்லி தம்பதிக்கு மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. 2 வயதிலேயே தந்தையை இழந்த ஜெயலலிதா படிப்பில் படு சுட்டியாக திகழ்ந்தார்.. சினிமா உலகிலும் நிகரில்லா நடிகையாக திகழ்ந்தார்..

பதினைந்து வயதில் திரை நட்சத்திரமாகத் மக்களுக்கு பளிச்சியமான ஜெயலலிதா, மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1964-ல் “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம் மூலம் இந்திய திரை உலகில் நுழைந்தார். இப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அடுத்தடுத்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். நடிகர் எம்.ஜி.ஆருடனான அவர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார்.

அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஜெ : 1980 இல் திரைத் துறையில் இருந்து விலகிய ஜெயலலிதா, பின்னர் 1982 ஆம் ஆண்டு, கடலூரில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 1983 ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் தீவிரமாக அ.இ.அ.தி.மு.க., அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார்.

பின்னர் 1984-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். மாநிலங்களவையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழை தேடித் தந்தன. அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து தனி ஆதரவு வட்டம் ஒருவருக்கு அப்போதே இருந்தது என்றால் அது ஜெயலலிதாவுக்குத்தான். இயல்பான ஒரு வளர்ச்சியாக ஜெயலலிதாவின் முன்னேற்றம் இருந்தது. 1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது எம்.ஜிஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார் ஜெயலலிதா. அவரது பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதிமுகவும் அமோக வெற்றி பெற்றது. 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர், 1988ல் அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு கட்சியும், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. ஆனால் 1989 தேர்தலில் ஜெயலலிதா தான்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு, அடுத்த தலைவர் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இதையடுத்து ஜானகி விலகிக் கொண்டார். அதிமுக ஒரே கட்சியாக மீண்டும் இணைந்தது. ஜெயலலிதா தலைமையில் புதிய பாதையில் நடை போட ஆரம்பித்தது அதிமுக. 1989-ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, அதிரடியாக செயல்பட ஆரம்பித்தார். தமிழக சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாதான்.

1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவம் சட்டசபையின் வரலாற்றில் மிகப் பெரிய களங்கமாக அமைந்து போனது. தான் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. கலைந்த தலையும், கிழிந்த சேலையுமாக அவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக முதல்வர் பதவியல் அமர்ந்தார் ஜெயலலிதா.

இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தார். அவர் ஆட்சி புரிந்த விதம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அந்த காலகட்டத்தில்தான் அவர் மிகப் பெரிய அளவில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பின்னாளில் வழக்குத் தொடரப்பட்டது. 1996ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். அதை 2006ல் பறி கொடுத்தார்.

2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் தான் பிறந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. 2015 மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5-வது முறையாக ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

2016 இல் எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்து 6 ஆவது முறையாக முதலமைச்சரானார் ஜெயலலிதா. அந்த ஆண்டு அவர் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவரது ஆட்சிக் காலங்களில் தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் காவல் நிலையங்கள், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.

Read more : ’என்னை ஒதுக்கிவிட்டார்களா’..? ’எனக்கு பல வாய்ப்புகள் உள்ளது’..!! காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பரபரப்பு பேட்டி..!!

English Summary

Iron Lady Jayalalitha’s 77th Birthday..!!

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.57,000 வரை சம்பளம்..!! கோவை மாவட்டத்தில் வேலை..!!

Mon Feb 24 , 2025
It is enough to have passed 10th standard..!! Salary up to Rs.57,000 per month..!! Job in Coimbatore district..!!

You May Like