திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கிற்கு தொடர்பாக 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பெங்களூருவில் வசிக்கும் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, விஜயலட்சுமி சீமானுடன் ஏற்பட்ட உறவு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் முதற்கட்டமாக இன்று (பிப்.27) சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு, சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர்.
ஆனால், சீமானின் மனைவி கயல்விழி அறிவுறுத்தலின் பெயரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சம்மனை கிழித்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை தள்ளிவிட்ட சீமானின் காவலாளி அமல்ராஜ் என்பவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காவல்துறையினரை கடுமையாக சாடினார். மேலும் நாளை விசாரணைக்கு ஆஜராகிப்போவதில்லை என்றும் நாளை மறுநாள் தான் ஆஜராவேன் என்றும் கூறினார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.