பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென நாகேந்திரனின் உடல்நிலை மோசமானது. இதனால், அவர் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தனக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பதால், தன்னை சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி நாகேந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், இதுகுறித்து முடிவெடுக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, நாகேந்திரனின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை தர சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், நாகேந்திரனை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக எந்தவொரு பரிந்துரையையும் மருத்துவர் குறிப்பிடாததால், நாகேந்திரனின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பின்னணி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 28 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதானவர்களின் ஒருவரான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.