தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற கனவோடு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து விட்டு வருடக் கணக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், இதுதொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்துவிட்டு, பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 9ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்திருந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கப்படுகிறது.
அதேபோல், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். அதேபோல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், எவ்வித அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்களும் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அதன்படி, 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750. பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Read More : தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு..!! உடலை மீட்கும் பணி தீவிரம்..!!