அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தனது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முக.ஸ்டலினின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து மாணவர் சேர்க்கையை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கல்வி ஒன்றே யாராலும் அழிக்க முடியாத சொத்து. இதை தனது சொல்லாலும், செயலாலும் நாள்தோறும் உறுதிப்படுத்தி வருகிறார் நம் முதலமைச்சர் ஸ்டாலின். தனது பிறந்தநாளை மாணவச் செல்வங்களுடன் கொண்டாடிடும் வகையில், திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார்.
இங்கு 2025 – 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து, அதற்கான சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களும் ‘அப்பா’ என்று அழைக்கும் நம் முதலமைச்சரை மாணவச் செல்வங்களுடன் இணைந்து வாழ்த்தி மகிழ்ந்தோம். முதலமைச்சரின் புகழ் ஓங்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.