கிருஷ்ணகிரியில் சில தினங்களுக்கு முன்பு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடையை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக். 30 வயதான இவருக்கு, திருமணமாகி பிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 2ஆம் தேதி இரவு அங்கு சென்ற கார்த்திக், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தூங்கியுள்ளார். ஆனால், மறுநாள் காலை உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டதில், அவர் கொலை செய்யப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதி மொபைல் டவர் லோகேஷன் ஆகியவற்றை வைத்து சம்பவம் நிகழ்ந்தபோது, அங்கு யார் யார் இருந்தார்கள் என்ற விவரங்களை போலீசார் எடுத்தனர்.
அதில் கடந்த 2ஆம் தேதி இரவு பழையூரை சேர்ந்த புவனேஸ்வரி (22) என்பவரின் செல்போனில் இருந்து தனியார் மருந்தக பணியாளர் தினேஷ்குமாருக்கு (25) அடிக்கடி ஃபோன் வந்துள்ளது. மேலும், அவரது மொபைல், கொலை நடந்த இடத்திற்கு அருகே வந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்த தினேஷை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் தானும், புவனேஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறோம். ஆனால், எனக்கு முன் புவனேஸ்வரியுடன் கார்த்திக்கிற்கு பழக்கம் இருந்துள்ளது. இதற்கிடையே, புவனேஸ்வரி என்னை காதலிக்க ஆரம்பித்ததும் கார்த்திக் உடனான தொடர்பை முற்றிலும் நிறுத்திவிட்டார். இதனால், அவர் அடிக்கடி போன் செய்து கொல்லை கொடுப்பார்.
இதையடுத்து, புவனேஸ்வரியிடம் கார்த்திக்கை தனியாக ஒரு இடத்திற்கு வரச் சொல்லி சொல்லியதாகவும், அதன்படி, கடந்த 2ஆம் தேதி இரவு விவசாய நிலத்திற்கு வந்தபோது, அவரை இரும்பு ராடால் அடித்து கொன்றதாகவும், தடயங்களை மறைக்க கொட்டகையில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் தினேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், பைக்கில் திரும்பிய தினேஷ் குமார், பழையூர் ஏரிக்கரையில் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராடை வீசிவிட்டு, கிருஷ்ணகிரி டூ வீலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு, பெங்களூருவுக்கு பேருந்தில் சென்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தினேஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த காதலி புவனேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.