சில அரசியல் தலைவர்கள் தங்கள் செல்வத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், சிலர் தங்களிடம் இருக்கும் சொத்துக்களை ரகசியமாகவே பராமரித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும் பில்லியன் கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அபரிமிதமான சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஆனால் புடின் தொடர்ந்து தனது செல்வ செழிப்பு மற்றும் சொத்து மதிப்பை குறைவாக காட்டி வருகிறார். எனினும் உலகின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதியாக புடின் இருக்கலாம் என்றும், அவரது சொத்து மதிப்பு £150 பில்லியன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 லட்சம் கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடினின் இந்த சொத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பிற உலகத் தலைவர்களின் சொத்துகளை விட மிக அதிகம். எனினும் ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்ளின் பதிவுகள் புதினின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலைமையை குறைவாகவே காட்டுகின்றன. அதன்படி, ஆண்டு சம்பளம் தோராயமாக £114,000 என பட்டியலிடுகிறது. அறிக்கையின்படி, அவரது அறிவிக்கப்பட்ட சொத்துக்களில் ஒரு சாதாரண அபார்ட்மெண்ட் மற்றும் 3 கார்கள் அடங்கும்.
இருப்பினும், புடினுக்கு மிக அதிகளவிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் உண்மையான சொத்துக்களில் ஆடம்பரமான வீடுகள், தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்கள் ஆகியவை அடங்கும்.
“புடினின் அரண்மனை” என்று அழைக்கப்படும் கருங்கடலில் உள்ள £1.4 பில்லியன் மதிப்புள்ள மாளிகை மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது.. இந்த எஸ்டேட்டில் ஒரு பளிங்கு நீச்சல் குளம், ஒரு ஆம்பிதியேட்டர் மற்றும் ஒரு கேசினோ கூட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாளிகையின் பராமரிப்பு செலவுகள் ஆண்டுக்கு £2 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, புடினிடம் 700 கார்கள், 19 கூடுதல் சொத்துக்கள் மற்றும் 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் ஆடம்பரமான சேகரிப்பை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
“தி ஃப்ளையிங் கிரெம்ளின்” என்ற புனைப்பெயர் கொண்ட £716 மில்லியன் ஜெட் விமானமும் அடங்கும். இவை தவிர புடினிடம் சில ஆடம்பர கடிகாரங்களும் உள்ளன. அவரின் ஆண்டு சம்பளத்தை விட அதிகமான மதிப்புள்ள கடிகாரங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. புடினின் மகத்தான செல்வத்தின் ஆதாரம் ஒரு மர்மமாகவே உள்ளது.
நாட்டின் தன்னலக்குழுக்களுடன் ஒப்பந்தங்கள் மூலம் ரஷ்யாவின் மிகப்பெரிய வணிகங்களில் ஒரு பங்கைப் பெற்று அவர் தனது செல்வத்தை ஈட்டியதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட இலாபகரமான அரசு ஒப்பந்தங்களிலிருந்து புடினுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. புடினின் செல்வத்தின் உண்மையான அளவு இதுவரை உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், அவர் உலகின் மிகவும் பணக்காரர் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக இருக்கிறார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன.