பிறப்பு சான்றிதழ் வாங்கும்போது என்னென்ன தவறுகளை செய்யக் கூடாது என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஒருவர் பிறந்தார் என்பதற்கு முக்கியமான ஆவணமாக பிறப்புச் சான்றிதழ் உள்ளது. இந்தியர் என்பதற்கு முக்கிய ஆதாரமே பிறப்பு சான்றிதழ் தான். அப்படிப்பட்ட பிறப்பு சான்றிதழ் இருந்தால் தான், பிறக்கும் குழந்தைகளுக்கு கூட ஆதார் எடுக்க முடியும். மேலும், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாஸ்போர்ட் எடுக்கவும், வாக்காளர் அட்டை வாங்கவும் என பலவற்றிற்கும் பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவைப்படுகிறது. அதேபோல், பிறப்பு சான்றிதழில் ஏதேனும் பிழை இருந்தால், அது ஆதார் உள்ளிட்ட மற்ற ஆவணங்கள் வாங்கும் போது சிக்கல் வரும்.
அது எப்படி என்றால், உங்கள் ஆதாரில் உங்கள் பெயருக்கு பின்னால் அப்பா பெயர் இனிசியலாக இருக்கும். ஆனால், உங்கள் மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கும் போது தெரியாமல் பெயரை மட்டுமோ அல்லது உங்கள் தந்தை பெயரையோ கொடுத்திருந்தால், பின்னாளில் ஆதார் வாங்க சிக்கலாக இருக்கும். பின்னர், உங்கள் மகனின் பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயரையும், உங்கள் மனைவி பெயரையும் ஆதாரில் உள்ளதுபோல் சரி செய்து வரவேண்டும் என்று கூறி அனுப்பி விடுவார்கள்.
அதேபோல், உங்கள் மகனின் பிறப்பு சான்றிதழிலும், உங்கள் பெயரை போலவே இனிசியலுடன் வாங்கிவிடுங்கள். இல்லையென்றால், இனிசியல் இல்லாமல் தான் உங்கள் குழந்தைகளின் ஆதார் கார்டு கிடைக்கும். அதை திருத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்கு நீங்கள் மீண்டும் பிறப்பு சான்றிதழ் பதிவு அலுவலரை சந்திக்க வேண்டியிருக்கும். அதேபோல், உங்கள் பிள்ளைகளை வெளிமாநிலங்களில் படிக்க வைக்க போகிறீர்கள் என்றால், பெயர் உள்பட அனைத்து விவரங்களும் ஆங்கிலத்திலும் வரும்படி சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால், தாசில்தார் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், புதிதாக வாங்கிய பிறப்பு சான்றிதழில் ஏதேனும் பிழை இருந்தாலும் அதை உடனே சரி செய்துவிடுங்கள். ஏனென்றால், பின்னாளில் அதை சரி செய்வது கடினமானதாகும். அதேபோல் பெயரை மாற்றுகிறீர்கள் என்றாலும் அடுத்த சில மாதத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது அது கடினம் ஆகும். எனவே, பிறப்பு சான்றிதழ் வாங்கும்போது, இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.