பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு, வார வேலை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதாவது, வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே பணி, அனைத்து பணியிடங்களிலும் தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய UFBU கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. ஆனால், இந்த கோரிக்கைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதன் எதிரொலியாக மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ளது. இதனால், மார்ச் 4-வது வார சனிக்கிழமை விடுமுறையுடன், ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை என தொடர்ந்து 4 நாட்களுக்கு அனைத்து வங்கிகளின் சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.