சமீபகாலமாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. தரமற்ற பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் முறைகளால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் சார்ஜிங் செய்ய தரமான சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான், சென்னையில் சார்ஜில் இருந்த எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், தாய் – தந்தை இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை அடுத்த மதுரவாயல், ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கலைவாணன். இவருக்கு மனைவியும், 9 மாத குழந்தையும் இருந்தது. கலைவாணன் எலெக்ட்ரிக் பைக் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி இரவு தனது வீட்டில் எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு, அப்படியே தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை அந்த பைக் திடீரென தீப்பிடித்தது. இதில், வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
தூக்கத்தில் இருந்த கலைவாணன் மற்றும் அவரது மனைவி தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். மேலும், குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், தீ மளமளவென பரவியதால், குழந்தையும் தீயில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, மூவரையும் மூட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.,
ஆனால், 9 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், தீவிபத்தில் பலத்த காயமடைந்த கணவன் – மனைவி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.