இன்றைய இளைஞர்கள் போதைக்கும், இன்ஸ்டா ரீல்ஸுக்கும் அடிமையாகியுள்ளனர். ஒரு வீடியோவுக்காக எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்க இளைஞர்கள் தயாராக உள்ளனர். அதில், ஒரு சில விஷயங்கள் பாராட்டக் கூடிய வகையில் இருந்தாலும், ஒரு சிலரின் வீடியோக்கள் முட்டாள்தனமானதாக இருக்கும். ரீல்ஸ் வீடியோவுக்காக பலரும் தங்களது உயிரை பறிகொடுத்துள்ளனர்.
ஆனால், இதையெல்லாம் பார்த்தும் கூட திருந்தாமல், இன்னும் பலரும் உயிரை சாதாரணமாக நினைத்து ரிஸ்க் எடுத்து வீடியோ போட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் வீடியோ எடுக்கின்றனர். காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்த போதிலும், தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்ஸ்டா ரீல்ஸுக்காக இரட்டை கொலை நடந்தது போல் போலியான ஒரு சம்பவத்தை நடத்திய இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பெங்களூருவின் எல்லா ஹோம்னாபாத் ரிங் ரோட்டில் இருவர், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைப்பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார், அவர்களின் அருகே சென்று பார்த்தபோது, இருவரும் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களை பிடித்து விசாரித்தபோது, இன்ஸ்டா ரீல்ஸ்க்காக இரட்டை கொலை நடந்தது போன்ற ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர். அவர்களின் பெயர் சச்சின், சைபன்னா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுபோன்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : ’சுனிதாவின் பயணம் அவரது விடாமுயற்சிக்கு ஒரு சான்று’..!! CM ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!