திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை அருகே மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அழியாபதி ஈஸ்வர் மற்றும் சிவகாமி அம்பாள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் சிலை கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என கூறப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனைகளை அம்பாள் செவி சாய்த்து கேட்பது சிறப்பாக கருதப்படுகிறது.
மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் வாசலில் இரு தூண்கள் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பக்கத்தில் அக்னி பகவானும், அம்பிகையும் சிவனுக்கு பூஜை செய்வது போன்ற சுதை சிற்பங்கள் மற்றும் இரு யானைகள் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உள்ள நந்தி மண்டபத்தில் ஆட்டின் தலையுடன் நந்தி பகவான் உள்ளார். சிவபெருமானிடம் ஆடு சாபம் நீங்க பெற்றபோது இந்த கோயிலில் நந்திக்கு பதிலாக தங்களுக்கு நானே காவல் இருப்பேன் என கேட்டுக்கொண்டதன் பேரில் நந்தியின் தோற்றம் ஆடு போல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மகா மண்டபமும் பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், சூரியன், சந்திரன், அதிகார நந்தி, சுப்பிரமணியர் ,சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், தட்சணாமூர்த்தி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். அடுத்துள்ள மணிமண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. மேலும் கருவறைக்கு வெளியே விநாயகரும் துவார பாலகர்களும் இருக்கின்றனர். அக்னீஸ்வரரின் உக்கிரம் தனிய மேலே உள்ள தாரா பாத்திரத்தில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் எப்போதும் சிவலிங்கத்தின் மேல் விழும் வண்ணம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பான ஒன்றாகும்.
காய்ச்சல், வெக்கை நோய் மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி அங்கிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்து அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் உடற்பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் பிரகாரத்தின் தென் பக்கம் உள்ள வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு சென்றால் அங்கு உடல் முழுவதும் உத்திராட்சம் பதித்தது போல கோமதி அம்மன் காட்சி தருகிறார். அனைத்து சிவாலய விசேஷங்களும் இந்த கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.