கோவையில் சமீபகாலமாக திருட்டு மற்றும் வழிப்பற்றி சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் நகை வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனிப்படையினர் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர்கள் சுற்றித் திரிந்ததும், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, போலீஸாரின் பிடியில் இருந்து கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது, காவல்துறையினர் அவர்களைத் துரத்திய நிலையில், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரும் விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில், இளைஞர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்கு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அவர்கள் பெயர் ஷபீல் (19), ஷம்சீர் (18). இவர்கள் இவரும் கோவையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் இரண்டு இடங்களில் வாகனங்களை திருடியது தெரியவந்தது. 3 மாதங்களாக தொடர்ந்து இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு, அந்தப் பணத்தில் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும், சோசியல் மீடியாவில் பார்த்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருடிய நகைகளை உருக்கி வைத்துக் கொண்டு, தேவைப்படும் சமயத்தில் அதனை விற்று பணமாக பெற்றுக்கொண்டு ஆடம்பர செலவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கைதான இருவரிடமும் 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்தனர்.
Read More : செம குஷி..!! மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட இனிப்பான செய்தி..!!