தங்களுடன் அணு ஆயுத உடன்படிக்கைக்கு வர மறுத்தால், ஈரான் மீது வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் பெரும் சிக்கலில் இருந்த ஈரான், பின்னர் பிரிக்ஸ் உடன் சேர்ந்து வளர தொடங்கியது. தற்போது ஈரான் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
மேலும், தனது சொந்த தேவைக்காக யுரேனியத்தை பயன்படுத்த ஈரான் தொடங்கியுள்ளது. அணு உலைகளில் மின்சார தயாரிப்புக்காக யுரேனியம் பயன்படுத்தப்படும். 2015அணு ஒப்பந்தத்தின்படி (JCPOA), ஈரான் 3.67% வரை மட்டுமே யுரேனியத்தை செறியூட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் விலகிய பிறகு, யுரேனியத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தது.
90% செறிவூட்டம் செய்யப்பட்டால், அந்த யூரேனியத்தை அணு குண்டு தயாரிக்க பயன்படுத்த முடியும். எனவேதான் அமெரிக்கா ஈரானை எச்சரித்து வருகிறது. ஆனால், இப்போது வரை ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் 60 சதவீதத்தை தாண்டவில்லை. இதனை ஏற்க மறுத்த டிரம்ப், உடனடியான அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைந்து செறிவூட்டலை குறைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
மேலும், ஈரான் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால், அந்நாட்டின் மீது வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசப்போவதாக எச்சரித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்கா எங்கள் மீது குண்டுகளை வீசினால் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கு என சொல்லிக்கொள்ள ராணுவ தளமோ, சொந்த கட்டமைப்புகளோ எதுவும் இருக்காது என பதிலுக்கு எச்சரித்துள்ளது. இதனால் தற்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.