ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 6ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். இதற்கு முன்னதாக 5ஆம் தேதி இலங்கை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், நேரடியாக மதுரை வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்த நிலையில், தற்போது அனுமதி வ்ழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இணைவதற்கு தொடர் முயற்சி எடுத்து வரும் ஓபிஎஸ், அதன் ஒருபகுதியாக பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் எப்படியாவது பிரதமர் மோடியை சந்தித்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடியும், ஓபிஎஸும் மும்முரமாக இருக்கிறார்களாம். அப்போது, இருவரையும் பிரதமர் மோடி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என தெரிகிறது. அப்படி நடந்தால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பெரிய கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.