எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தின் போது எம்புரான் திரைப்படம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை பேராபத்தை விளைவிக்கும் அணை என்றும், அந்த அணை உடைந்தால் கேரளா அழியும் என்ற வசனமும் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த திரைப்படம் தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வருவதையும் சுட்டிக் காட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”நான் அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதனைப் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபமும், பயமும் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வை திரைப்படத்தில் பதிவு செய்திருந்தால் அவை தேவையற்றது. அந்த படத்தால் பிற மாநிலங்களில் கூட பிரச்சனை வரலாம்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”அந்த காட்சி சென்சாரில் கட் செய்யப்படவில்லை. ஆனால், படம் வெளியான பிறகு எழுந்த எதிர்ப்பால் தற்போது அந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகள், இன்னும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : ’திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறு’..!! ’இளைஞர்களின் காவல்துறை கனவே பறிபோச்சு’..!! கொந்தளித்த அண்ணாமலை..!!