தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 6ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். தற்போது அவர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், நேரடியாக மதுரை வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார்.
மதுரையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இணைவதற்கு தொடர் முயற்சி எடுத்து வரும் ஓபிஎஸ், அதன் ஒருபகுதியாக பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், பிரதமர் மோடியை சந்திக்க டிடிவி தினகரன் அனுமதி கேட்டிருந்த நிலையில், அவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுகிறார். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமே எடப்பாடி பழனிசாமி தான் என சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இந்த விவகாரம் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.