தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி கொழும்புவில் பேசியுள்ளார்.
இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வங்காளதேசம், மியான்மர், நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன. இதற்கு ’பிம்ஸ்டெக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6-வது உச்சி மாநாடு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், இந்த மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை 6 அமைச்சர்கள் வரவேற்றனர். மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, 6ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4-வது பயணம் இதுவாகும்.
இந்நிலையில், இலங்கை கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன். மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை அதிபருடன் பேசியுள்ளேன். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன” என்றார்.
மேலும், இலங்கை இக்கட்டான சூழலில் சிக்கியபோது இந்தியா உதவியுள்ளது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் இந்தியா பெரிதும் உதவி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, பொருளாதரா நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்தபோதும், இந்தியா துணை நின்றது. இலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. தற்போது இலங்கையில் உள்ள 3 கோயில்களை சீரமைக்க இந்தியா உதவும்” என்று தெரிவித்துள்ளார்.