சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 196 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 215 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 417 காலிப்பணியிடங்களுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.04.2025 காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கென அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 வேலை நாட்களுக்குள் அதாவது 23.04.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்தப்பின். அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் மாத மொன்றுக்கு ரூ.7700/எனவும். பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.7700-24200 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.
மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.5700/ எனவும், பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.5700 முதல் 18000 என்ற விகிதத்திலும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.4100/- எனவும், பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.4100 12500 என்ற விகிதத்தில் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விண்ணப்பிக்கலாம், குறிப்பாக தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், விதவைகள். ஆதரவற்ற பெண்கள், எஸ்சி / எஸ்டி வகுப்பினர் 25 வயது முதல் 40 வயது வரையிலும், மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விண்ணப்பிக்கலாம், குறிப்பாக தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி/ எஸ்டி வகுப்பினர் 20 வயது முதல் 45 வயது வரையிலும், மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயது வரையிலும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி. நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டு அல்லது மைய அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும், மேலும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்ற பெண் (தாய்/தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.