மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் செயலிகளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்டவைகளில், அவ்வப்ப்போது சில மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில், 16 வயதுக்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமல் இனி நேரடி (Live) ஒளிபரப்புகளை செய்ய முடியாது என அறிவித்துள்ளது. இது, டீனேஜர்களின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த மாற்றங்கள் முதலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும், பின்னர் அடுத்த மாதங்களில் உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் கணக்குகளிலும் விரிவாக்கப்படும். தவறான தொடர்புகள், பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும். சமூக ஊடகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலுக்கு மத்தியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாட்டை மேற்பார்வையிட மெட்டா தனது டீன் ஏஜ் கணக்கு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த அம்சங்கள் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்களின் கீழ், பெற்றோர் அனுமதி வழங்காவிட்டால், 16 வயதுக்குட்பட்ட டீனேஜர்கள் இன்ஸ்டாகிராம் லைவ்வைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட புதிய அம்சங்களைத் தவிர, டீன் ஏஜ் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காக மெட்டா பல்வேறு பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. அவை, டீனேஜ் பயனர்களின் கணக்குகள் விருப்பப்படி தனிப்பட்ட (Private) கணக்காக மாற்றும் வசதி. அந்நியர்களிடமிருந்து வரும் தனிப்பட்ட செய்திகளை தடுக்கின்ற பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சண்டை வீடியோக்கள் மற்றும் மற்ற தீவிர உள்ளடக்கங்கள் மீது கடுமையான வரம்புகள் விதிக்கப்படுகின்றன. செயலியில் அதிக நேரம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், 60 நிமிடங்களுக்கு பிறகு வெளியேற நினைவூட்டல் ஏற்படுத்தப்படுகிறது. படுக்கை நேரங்களில் செயலியின் அறிவிப்புகள் தானாகவே நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Read More: SIM-கள் மூலம் தரவுகள் கசியும் அபாயம்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டல்..!!