இந்தியா போன்ற பரந்த நாடுகளில், நீண்ட தூரம் பயணிக்கவும், எளிதாக நகரம் விட்டு நகரம் செல்கவும் மக்கள் அதிகளவில் சார்ந்திருப்பது ரயில்வே சேவையே. நாட்டின் வட பகுதியிலுள்ள காஷ்மீர் முதல் தென் முனையமான கன்னியாகுமரி வரை, இந்திய ரயில்வே தனது சேவைகளை விரிவாக கட்டமைத்துள்ளது.
தினமும் 13,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் நாடெங்கும் இயங்குகின்றன. இவை மூலம் சராசரியாக 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர். இந்த அளவிலான பயணிகள் எண்ணிக்கையால், இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே வலையமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ரயில்கள் குறைந்த கட்டணத்தில், பஸ் கட்டணத்தைவிட கூட குறைவாகவும், சிறந்த வசதிகளோடும் சேவையளிக்கின்றன.
படுக்கை வசதி, கழிவறைகள், ஏசி பெட்டிகள், உணவு வசதி, மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஆகியவை உள்ளதனால், மக்கள் பெரும்பாலும் ரயில்தான் சிறந்த பயண விருப்பம் என எண்ணுகின்றனர். குறிப்பாக நீண்ட தூர பயணங்களில் இது மிகுந்த நிம்மதியையும், வசதியையும் வழங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. லக்கேஜ் அளவுக்கேற்ப கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண வகைக்கு ஏற்ப இலவச லக்கேஜ் அனுமதி:
- ஏசி முதல் வகுப்பு (AC First Class) – 70 கிலோ வரை
- ஏசி இரண்டாம் வகுப்பு (AC 2 Tier) – 50 கிலோ வரை
- ஏசி மூன்றாம் வகுப்பு (AC 3 Tier) – 40 கிலோ வரை
- முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகள் – 40 கிலோ வரை
- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (Second Class) – 35 கிலோ வரை
கூடுதல் லக்கேஜ் கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி எடுக்கப்படும் ஒவ்வொரு 10 முதல் 15 கிலோக்கு 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:
- வெடிபொருட்கள், தீயில் எளிதாக பற்றக்கூடியவை, மற்றும் ரசாயன தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனுமதிக்கப்பட்ட அளவை மீறி லக்கேஜ் எடுத்துச்சென்றால் அபராதமும் விதிக்கப்படும்.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதலின்படி, பயணிகள் தங்கள் லக்கேஜ்களை திட்டமிட்டு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.