10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடிகள் உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்புக்கு மார்ச் 28ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியான இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.