தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை..? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை என்ற அரசாணையை நடைமுறைபடுத்தக் கோரி காவலர் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், காவலர்கள் அதிக பணிச்சுமை காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாகவும், 2021இல் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். விசாரணையின் போது தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்களுக்கு சங்கங்கள் இருக்கும்போது, காவல்துறைக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இல்லை. 2021இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Read More : கார் ஏசியில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!! அதுவும் கோடை காலத்தில் கட்டாயம் இதை மறந்துறாதீங்க..!!