காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில், பதானி சூட் அணிந்த ஒருவர் தாக்குதல் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் புகைப்படம் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்தது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 23 அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் கடும் உயிர் ஆபத்துடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், சம்பவம் காஷ்மீர் பகுதியில் நடந்த மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களின் நோக்கங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பஹல்காம் சுற்றுலாப் பயணி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியின் முதல் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரின் உருவப்படம் என்றும், அவர் ஆயுதங்களை ஏந்தி பதானி உடையில் இருப்பது போலவும் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் நேற்று இரவு 1 மணி முதல் 2 மணி வரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தினரிடம் பகிரப்பட்டது.
இந்த அமைப்பு மற்றும் தோற்றத்துடன் பொருந்தக்கூடிய எந்தவொரு சந்தேக நபர்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து விசாரிக்கவும், அதற்கேற்ப பொருத்தமான தகவல்களைச் சேகரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், படம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.