Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக கூறப்படும் பயங்கரவாதிகளின் வரைபடங்களை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு உலக அரசியல் கட்சி தலைவர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் ஆர்டிக்கிள் 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2019 இல் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ அல்லது சுருக்கமாக TRF என அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட செயல்பட்டு இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பாக TRF இயங்கி வருவதாக நம்பப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பாக செயல்பட்டாலும், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மதச்சார்பற்ற இயக்கமாக ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும் இந்த இயக்கம் இதுவரை நடத்திய தாக்குதலில் பொதுமக்களை குறிப்பாக காஷ்மீர் இந்துக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மீதும், காஷ்மீரின் லோக்கல் அரசியல்வாதிகள் மீதும் இதே இயக்கம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்துபவர் ஷேக் சஜ்ஜாத் குல். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவரும் இவரே. இந்த இயக்கத்தின் குறிக்கோள் காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பதே. அதனை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்யப்பட்ட இயக்கமாக கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தது. மேலும், ஷேக் சஜ்ஜாத் குல்லை தேடப்படும் தீவிரவாதியாகவும் இந்திய அரசு அறிவித்தது.
இந்தநிலையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தற்போது பயங்கரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்டுள்ளனர்.இந்த சந்தேக நபர்கள் ஆசிப் புஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுடன் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் இந்த ஓவியங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை மக்கள் அடையாளம் காண உதவும் வகையில் இந்த ஓவியங்கள் அப்பகுதியில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த சந்தேக நபர்களின் மறைவிடங்கள் மற்றும் தொடர்புகளை புலனாய்வு அமைப்புகள் இப்போது விசாரணை செய்வதில் மும்முரமாக உள்ளன.