ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் இன்பமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு புதரில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் தெறித்து ஓடியுள்ளனர்.
தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதற்கிடையே, இந்த தாக்குதலில் உயிரிழந்த தனது கணவரின் சடலம் அருகே மனைவி சோகமே அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த கொடூர தாக்குதலில் தனக்கும் காயம் ஏற்பட்ட போதிலும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் கணவரின் உடல் அருகே மனைவி அமர்ந்து கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க செய்தது.
இதனைத் தொடந்து, தாக்குதல் தொடர்பாக அந்தப் பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பஹல்காம் பள்ளத்தாக்கில் குவிந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதை பயங்கரவாதிகள் உறுதிப்படுத்திக் கொண்டுதான் தாக்குதல் நடத்தினர். இந்துக்களை மட்டுமே குறிவைத்து இந்தத் தாக்குதலைத் தீவிரவாதிகள் நடத்தினர். அந்த வகையில், தாங்கள் இந்து என்பதால், தனது கணவரின் நெற்றியில் குறிவைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்” என அந்தப் பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.