அசையா சொத்துகளை பதிவு செய்யும் போது, அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இன்று மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி, அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது, முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவண பதிவு செய்யும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட ஆவணங்களை சமர்பிக்காதபட்சத்தில் ஆவணங்கள் மீது சொத்துகள் பதிவு செய்யப்பட மாட்டாது. மேலும், மூதாதையர்கள் சொத்தாக இருந்து அதற்கான அசல் ஆவணங்கள் இல்லையென்றால், வருவாய் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், அந்த ஆவணத்தை கண்டறிய முடியவில்லை என்றால், காவல்துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசையா சொத்துகளை பதிவு செய்யும் போது, அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவு தொடர்பாக அதிமுக சார்பில் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரினார். மேலும், நாளை இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’நீங்க அடிக்கடி Gmail யூஸ் பண்றீங்களா’..? ’மொத்த தகவலையும் திருட போறாங்க’..!! உடனே இதை பண்ணுங்க..!! கூகுள் திடீர் எச்சரிக்கை..!!