ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கிடையே, இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் தான், பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு பிறகு ”ஆபரேஷன் சிந்தூர்; நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது; ஜெய்ஹிந்த்” என இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது, இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே “ஆபரேஷன் சிந்தூர்” என்றும் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.