புளோரிடா மாநிலத்தில் 13 வயது மாணவன் ஒருவர், ChatGPT-யிடம் “என் நண்பரை எப்படிக் கொல்வது?” என்று கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் கல்வி மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் டெலாண்டில் அமைந்துள்ளது சவுத்வெஸ்டர்ன் நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவர் ஒருவர், வகுப்பு நேரத்தில் பள்ளி வழங்கிய கணினியில் ChatGPT-யிடம் “வகுப்பின் நடுவில் என் நண்பரை எப்படிக் கொல்வது?” என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
இந்தச் செயல் பள்ளியின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பில் (digital monitoring system) உடனடியாக பதிவு செய்யப்பட்டது. அந்த மென்பொருள், மாணவர்கள் இணையத்தில் எழுதும் சந்தேகமான அல்லது ஆபத்தான கேள்விகளை தானாகவே கண்காணித்து பள்ளி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் எச்சரிக்கை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எச்சரிக்கை வந்தவுடன் போலீசார் விரைந்து பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், “யாரையும் கொலை செய்யும் நோக்கம் இல்லை; வெறும் கேலியாக எழுதியேன்” என மாணவன் விளக்கம் அளித்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம், AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு பள்ளிகளில் எவ்வளவு பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கையாக மாறியுள்ளது.



