கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான கொலை சம்பவம், அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறுவர்களிடையே ஏற்பட்ட காதலும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரமும் ஒரு 14 வயது மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன், 9-ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், வனியம்பலம் ரயில் நிலையம் அருகிலுள்ள வனப்பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பள்ளிச் சீருடையுடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த மாணவியின் தோற்றம் காண்போரை நிலைகுலைய செய்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் காதலனான 16 வயது மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனக்கும் அந்த மாணவிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், சமீபத்தில் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று அந்த மாணவி கூறியதாகவும் அவன் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவன், மாணவியை திட்டமிட்டு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டான்.
தற்போது அந்த மாணவனை கைது செய்துள்ள போலீசார், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



