வழக்கமான ஜிம் பயிற்சி மற்றும் கடுமையான பளு தூக்குதல் காரணமாக, 27 வயது இளைஞருக்கு திடீரென பார்வை இழப்பு ஏற்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜிம்மில் டெட்லிஃப்ட் பயிற்சி மேற்கொண்டபோது, அதிக சிரமம் ஏற்பட்ட உடனேயே, அந்த இளைஞருக்கு வலது கண்ணில் பார்வை மங்கல் தோன்றியதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற கண் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் மார்க்கன் தெரிவித்தார். அந்த நபர் முன்பு எந்த கண் தொடர்பான பிரச்சனையும் இல்லாத, முழுமையாக ஆரோக்கியமானவராக இருந்ததாகவும் கூறினார்.
பயிற்சிக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட கண்ணில் பார்வை விரல்களை எண்ணக்கூடிய அளவிற்கு மட்டுமே இருந்தது. வலி இல்லாததால், நிலைமை மேலும் கவலைக்குரியதாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இடது கண் முற்றிலும் இயல்பாகவே இருந்தது. விரிவான கண் பரிசோதனையில், மையப் பார்வைக்கு முக்கியமான மேக்குலா பகுதியின் மேல் ரத்தக்கசிவு (Subhyaloid / Pre-retinal Hemorrhage) இருப்பது கண்டறியப்பட்டது. B-Scan பரிசோதனையில் விட்ரியஸ் ரத்தக்கசிவு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், திடீர் பார்வை இழப்பிற்கு காரணமாக இருக்கக்கூடிய விழித்திரை கிழிவு அல்லது விழித்திரை பற்றின்மை போன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பளு தூக்கும் போது ஏற்பட்ட கடுமையான உடல் அழுத்தத்தின் அடிப்படையில், அந்த இளைஞருக்கு வல்சால்வா ரெட்டினோபதி (Valsalva Retinopathy) எனப்படும் அரிய கண் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வல்சால்வா ரெட்டினோபதி என்றால் என்ன? இருமல், கடுமையான சிரமம், பளு தூக்குதல் போன்ற நேரங்களில், மார்பு பகுதியில் திடீரென அழுத்தம் அதிகரிப்பதால், விழித்திரை நுண்குழாய்கள் வெடித்து கண்ணுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும் நிலையே வல்சால்வா ரெட்டினோபதி ஆகும். இது பொதுவாக திடீர் மற்றும் வலியற்ற பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
மருத்துவர்கள் எச்சரிக்கை: உடற்பயிற்சி செய்யும் போது, குறிப்பாக அளவுக்கு மீறிய பளு தூக்குதல் மற்றும் மூச்சை அடக்கி பயிற்சி செய்வது, கண்கள் மட்டுமல்லாமல் உடலின் பிற முக்கிய உறுப்புகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடற்பயிற்சி அல்லது கடுமையான உழைப்புக்குப் பிறகு பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: “உங்கள் டிடர்ஜெண்ட் ஒரு ஸ்லோ பாய்சன்.. புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்..” மருத்துவர் வார்னிங்..!



