இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது. இன்று (டிசம்பர் 24), புதன்கிழமை காலை 8:54 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC-ஷார்) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து LVM3-M6 ராக்கெட் ஏவப்பட்டது..
இந்தத் திட்டத்தின் மூலம், அமெரிக்க நிறுவனமான AST ஸ்பேஸ்மொபைல் உருவாக்கிய ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 520 கி.மீ. உயரத்தில் உள்ள தாழ் புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.. இந்த ஏவுதலுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
சுமார் 6,100 கிலோகிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படும் LVM3 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரோவின் வரலாற்றில் LVM3 ராக்கெட் மூலம் தாழ் புவி சுற்றுப்பாதையில் அனுப்பப்படும் மிக அதிக எடை கொண்ட வணிகச் செயற்கைக்கோள் இதுவாகும். ஏவப்பட்ட 15 நிமிடங்கள் 07 வினாடிகளுக்குப் பிறகு செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து பிரிந்து செல்லும். இந்த ஏவுதலுக்கு வானிலை மிகவும் சாதகமாக உள்ளது.
ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது. இது உலகின் சாதாரண மொபைல் போன்களுக்கு நேரடியாக அதிவேக செல்லுலார் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது. இமயமலையின் மிகக் குளிரான பகுதிகள், தார் பாலைவனத்தின் தொலைதூரப் பகுதிகள், அடர்ந்த காடுகள் மற்றும் கடலின் நடுவில் உள்ள பகுதிகள் போன்ற மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாத இடங்களிலும் இணையம், குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற சேவைகள் கிடைக்கும்.
இந்த செயற்கைக்கோள் சாதாரண செயற்கைக்கோள்களை விட மூன்றரை மடங்கு பெரியது, சுமார் 223 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்ட வரிசை ஆண்டெனாவைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய வணிகத் தொடர்பு செயற்கைக்கோள்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
AST ஸ்பேஸ் மொபைல் நிறுவனம் ஏற்கனவே செப்டம்பர் 2024-ல் ப்ளூபேர்ட் 1-5 செயற்கைக்கோள்களை ஏவி, அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் தொடர்ச்சியான இணைய சேவையை வழங்கி வருகிறது. ப்ளூபேர்ட் பிளாக்-2 மூலம், இந்த நெட்வொர்க் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொபைல் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து சேவை வழங்கும். இந்தத் திட்டம் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் AST ஸ்பேஸ் மொபைல் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு வணிக ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இது 2025-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் ஐந்தாவது ஏவுதல் மற்றும் LVM3 ராக்கெட்டின் ஆறாவது செயல்பாட்டுப் பயணமாகும். கடந்த காலத்தில், சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் ஒன்வெப் திட்டங்கள் போன்ற முக்கியமான ஏவுதல்கள் இந்த ராக்கெட் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. இது வணிக விண்வெளி ஏவுதல்களில் இந்தியாவை மேலும் வலுப்படுத்தும்.. இந்த வெற்றிகரமான ஏவுதல் இந்திய விண்வெளி அறிவியலுக்கு மற்றொரு மைல்கல்லாக மாறி உள்ளது..
Read More : உஷார்..!! இந்த 3 செயலிகள் உங்கள் போனில் இருக்கா..? வங்கிக் கணக்கு காலி ஆகலாம்..!! அரசு எச்சரிக்கை..!!



