அமேசானில் சாம்சங் Galaxy Z Fold 7 எவ்வளவு எடை கொண்டதோ, அதேபோல எடை கொண்ட ஒரு மார்பிள் கல் வந்த சம்பவம் நடந்துள்ளது.. பெங்களூரு சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் பிரேமாநந்த் அமேசான் மூலமாக அவர் ரூ.1.87 லட்சம் மதிப்புள்ள Samsung Galaxy Z Fold 7 மொபைலை ஆர்டர் செய்தார். ஆனால் பெட்டியை திறந்தபோது, புதிய மொபைல் பதிலாக ஒரு மார்பிள் கல் மிக அழகாக அடுக்கப்பட்டிருந்தது.
பிரேமானந்த், இந்தியாவில் சாம்சங் விற்பனை செய்யும் மிக விலையுயர்ந்த மொபைல் — Galaxy Z Fold 7 —ஐ கடந்த அக்டோபர் 14ஆம் தேதி ஆர்டர் செய்தார். ரூ. 1.87 லட்சம் மதிப்புள்ள மொபைலுக்கான தொகையை கிரெடிட் கார்டு மூலம் முழுமையாக செலுத்தியிருந்தார். தீபாவளிக்கு முன் தனது புதிய மொபைலைப் பெறுவேன் என்ற மகிழ்ச்சியோடு இருந்த அவர், டெலிவரி தாமதத்தால் அக்டோபர் 19ஆம் தேதி தான் பார்சலை பெற்றார்.
மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டு, பிரேமாநந்த் தனது அன்பாக்சிங் (unboxing) செயல்முறையை வீடியோவில் பதிவு செய்தார். அந்த வீடியோவில் அவருக்கு வந்த பார்சலில் மொபைல் இல்லை, ஒரு கனமான மார்பிள் கல் மட்டுமே இருப்பது தெரிகிறது.
பிரேமானந்த் இதுகுறித்து பேசிய போது “நான் ரூ.1.87 லட்சம் மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி Z Fold 7 ஆர்டர் செய்தேன். ஆனால் மொபைல் கிடைக்காமல், ஒரு மார்பிள் கல் வந்தது! தீபாவளிக்கு முன் நடந்த இந்த சம்பவம் எங்கள் கொண்டாட்ட மனநிலையை முற்றிலும் கெடுத்தது. ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் உடனடியாக தேசிய சைபர் குற்ற புகார் தளத்தில் (National Cybercrime Reporting Portal – NCRP) புகார் பதிவு செய்தார். பின்னர் பெங்களூருவின் குமாரசாமி லேயவுட் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டது. போலீசார் இந்த மோசடியின் மூலத்தை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, அமேசான் சம்பவத்தை ஆராய்ந்து, பிரேமானந்த் வழங்கிய வீடியோ ஆதாரங்களை பரிசீலித்தது. உடனடியாக ரூ. 1.87 லட்சம் முழுத் தொகை அவருக்கு திருப்பித் தரப்பட்டது.
நிபுணர்கள் கூறுவது:
ஆன்லைனில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, unboxing வீடியோ பதிவு செய்வது மிக முக்கியம்.
ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு “open-box delivery” வசதி வழங்கப்படுகிறது – அதாவது, பொருளை வாங்கும் முன் திறந்து சரிபார்க்கும் முறையுடன்.
இதுபோன்ற மோசடிகளை சந்தித்தால், உடனடியாக அந்த இ-காமர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் மூலம் புகார் அளிக்கவும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யவும், அதேபோல் சைபர் குற்ற புகார் தளம் (1930 / cybercrime.gov.in) மூலமும் தகவல் அளிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சம்பவம், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் நினைவூட்டுகிறது.



