சென்னை திருவான்மியூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சதீஷ்குமாரின் மனைவி மஞ்சு (40). இவர் நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒரு குடுகுடுப்பைக்காரர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நபர், மஞ்சுவிடம், “உங்கள் வீட்டிற்கு கெட்ட நேரம் வந்துவிட்டது; உங்கள் குடும்பத்திற்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று கூறியுள்ளார். இதனால் மஞ்சு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மாந்திரீகம் செய்து செய்வினையை அகற்றிவிடுவதாக கூறிய அந்த நடுகுடுப்பைக்காரன், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். மஞ்சு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறவே, ஒரு கயிற்றை மஞ்சுவின் கையில் கட்டிவிட்டு, ரூ.20 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டான். மஞ்சு உடனே தன்னிடம் இருந்த ரூ.10,000 பணத்தை அவனிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த பணம் போதாது எனக் கூறிய அந்த நபர், மஞ்சு அணிந்திருந்த வளையல் மற்றும் காதணிகள் உட்பட 4 சவரன் நகையையும் பறித்துள்ளார். சுடுகாட்டிலும், தெருமுனையிலும் சில மாந்திரீக வேலைகள் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து நகையை திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பாததால், மாலையில் வீடு திரும்பிய கணவரிடம் மஞ்சு நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். உடனடியாக சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (50) என்ற அந்த மோசடி நபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து, அவரிடமிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பாலமுருகன், சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு இதுபோன்ற கைவரிசையை காட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Read More : வீட்டு வைத்தியம் மூலம் 2 மடங்கு உடல் எடையை குறைக்கலாம்..!! இந்த ஒரு பானம் போதும்..!!



