புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கீழஏம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த பழங்குடியின மாணவனை தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவலின்படி, மாணவன் இயற்கை உபாதைக்குச் சென்ற போது “இதைக் கிளீன் செய்வது யார்?” எனக் கூறி தலைமை ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சிறுவன் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விளக்கம் கேட்கச் சென்ற பெற்றோரை, தலைமை ஆசிரியர் சாதி பெயரில் திட்டியதோடு மட்டுமல்லாமல், கிராம மக்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் படிக்கக்கூடாது” என மிரட்டியதாகவும் பெற்றோர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு பேர் அந்தப் பள்ளியில் படித்து வரும் சூழலில், அவர்கள் யாருமே அந்தப் பள்ளியில் படிக்கக்கூடாது எனச் சொல்லியதாகத் தெரிகிறது. இதற்காகவே தங்கள் மகனைத் தாக்கி, மிரட்டியதாகவும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளன. “தலைமை ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சிறுவனை இவ்வாறு தாக்கிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.