ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான தாமிரம் மற்றும் கோபால்ட் சுரங்கத்தில், அதிக எடையை தாங்க முடியாமல் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 முதல் 40 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் லூலபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத்தில் நிகழ்ந்தது.
லூலபா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ராய் கவும்பா மயோண்டே இது குறித்து பேசுகையில், கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சுரங்க நிர்வாகம் எச்சரித்திருந்தது. ஆனாலும், சுரங்கத்திலிருந்து கனிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுக்கச் சென்ற தொழிலாளர்கள், அந்தத் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததே விபத்திற்குக் காரணம் என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அரசு சார்ந்த சுரங்க வழிகாட்டுதல் சேவை வெளியிட்ட அறிக்கையில், விபத்து நடந்த நேரத்தில், சுரங்கப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றம் காரணமாக, சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் பாலத்தை நோக்கி ஓடிச் சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் பாலத்தின் மீது கூடியதால், அது பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பலர் மூச்சுத்திணறல் மற்றும் காயங்களால் உயிரிழந்தனர்.
காங்கோ நாடு, மின்சார வாகன பேட்டரிகள் தயாரிப்பில் மிக முக்கியமான மூலப்பொருளான கோபால்ட் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ளது. நாட்டின் கோபால்ட் உற்பத்தியில் பெரும் பகுதி (சுமார் 80%) சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சுரங்கத் துறையில் நீண்ட காலமாகவே குழந்தை தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற வேலைச் சூழல் மற்றும் ஊழல் போன்ற பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. வாழ்வாதாரம் தேடி அபாயமான சுரங்கங்களில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை, இந்த விபத்து மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



